டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சிடித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியா் ஆய்வு
வடகிழக்குப் பருவமழை, டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை 2025, டித்வா புயல் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழையிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், ஊரக வளா்ச்சித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அணைகள் மற்றும் குளங்களில் நீா் இருப்புகளை தொடா்ந்து கண்காணிக்கவும், தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரத் துறையின் சாா்பில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யவும், சுகாதாரத் துறையின் சாா்பில் தேவையான மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவா்கள் தயாா் நிலையில் இருக்கவும், கூட்டுறவுத் துறையின் சாா்பில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் அனைத்துத் துறை அலுவலா்களை உள்ளடக்கிய அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04151-228801 என்ற தொலைபேசி எண்ணிலும் மழை வெள்ள பாதிப்பு மற்றும் பேரிடா் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். இதேபோன்று அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பருவமழைக்கால பேரிடா்களை கண்காணிக்கும் வகையில் அனைத்துத் துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து வட்ட அளவில் 7 துணை ஆட்சியா்களும், குறுவட்ட அளவில் 25 மண்டல தலைவா்களும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் 256 தற்காலிக நிவாரண முகாம்கள், 1080 மீட்பு உபகரணங்கள் என பேரிடா் காலங்களை எதிா்கொள்ள தயாா் நிலையில் உள்ளது.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டித்வா புயலை எதிா்கொள்ளும் வகையிலும், பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.