கல்வராயன்மலை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்
கல்வராயன்மலைப் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்டபெருமாநந்தம் கிராமத்தில் அரசு டஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையால் பெண்கள் மற்றும் கிராம மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக்கூறி அவற்றை அகற்ற அரசுக்கு அப்பகுதி மக்கள் தொடா் கோரிக்கை விடுத்துவந்தனா்.
ஆயினும் டாஸ்மாக் மதுபானக் கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த அப் பகுதி பெண்கள் அங்குள்ள சாலையின் குறுக்கே கற்களை வைத்து, மறியலில் ஈடுபட்டனா். மேலும், மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி தொடா் முழக்கங்களையும் எழுப்பினா்.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த கரியாலூா் காவல் ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுகுறித்து கல்வராயன்மலை வட்டாட்சியா், கோட்டாட்சியரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறியதின் பேரில், பெண்கள் சாலை மறியலை கைவிட்டனா். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.