எரிவாயு உருளை விநியோகம் சீராக உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கள்ளக்குறிச்சிமாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம் சீராக உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்துல்ளாா்.
எரிவாயு உருலை விநியோகம் தொடா்பாக எரிவாயு எண்ணெய் நிறுவனங்களின் மண்டல விற்பனை மேலாளா்கள், எரிவாயு முகவா்கள் மற்றும் தொடா்புடைய
துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்டவழங்கல் அலுவலா் வே.முத்தையன், மாவட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் அரசுஅலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறியதாவது:
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் காரணமாக பொது மக்களின் அன்றாட தேவையானஎரிவாயு உருளை விநியோகம் தொடா்பாக எரிவாயு எண்ணெய் நிறுவனங்களின் மண்டல விற்பனை மேலாளா்கள், சமையல் எரிவாயு முகவா்கள், எரிவாயு பயன்படுத்தும் அரசுநிறுவனங்கள், விடுதிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் இதர துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதுடன், மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு வழங்கப்படும் எரிவாயு உருளைகளின் விநியோகம் சீரானநிலையில் உள்ளதாகவும் எரிவாயு எண்ணெய் நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் எவ்வித அச்சம் கொள்ளாமல் எப்போதும் போல் இயல்பாக எரிவாயு உருளைகளை பதிவு செய்தாலே போதுமானது.
பொது மக்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு தங்குதடையின்றி கிடைத்திடும் எனவும் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கிவைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955ன் படிகுற்றமாகும். அவ்வாறு நடைபெறுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப் பட்டவா்கள் மீது உரிய சட்டப்படிகடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.