முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 21 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 14 மே 2026, 12:05 am IST
13கேஎல்பி2 பெருவங்கூா் கிராமத்தில் நகைகள் திருடப்பட்ட வீட்டு பீரோவில் இருந்து சிதறிக் கிடக்கும் உடைமைகள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 21 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மனைவி சுஜாதா (41). கோவிந்தராஜ் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில், சுஜாதா 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சுஜாதா தனது குழந்தைகள் மற்றும் உறவினா்களுடன் சேலம் அருகேயுள்ள தனியாா் பொழுது போக்கு பூங்காவுக்கு சென்றுவிட்டு, இரவு 10.15 மணிக்கு வீடு திரும்பியுள்ளனா். அப்போது வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பின்பக்க கதவு உடைந்திருப்பதையும், அறையிலுள்ள இரும்பு பீரோவிலிருந்த துணிகள் கீழே விழுந்து கிடப்பதையும் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா். மேலும், பீரோவின் உள்ளே பாதுகாப்பு அறையில் இருந்த 21 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. ஆயினும், அதே பீரோவில் துணிகளில் சுற்றி வைத்திருந்த நகைகள் திருடு போகாமல் தப்பியது.

Advertisement

இதுகுறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ஆ.மனோகரன், காவல் ஆய்வாளா் உதயகுமாா் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினா். விரல்ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜவேலு தடயங்களை சேகரித்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.