புதுச்சேரி

'பேச்சளவில் நின்றுவிட்ட காரைக்கால் சிறப்பு பொருளாதார மண்டலம்'

காரைக்கால், ஜூன் 28: காரைக்கால் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான நிலம் தயாராக இருந்தும், அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சளவிலேயே இருந்து வருகிறது. கடந்த 2000-

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், ஜூன் 28: காரைக்கால் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான நிலம் தயாராக இருந்தும், அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சளவிலேயே இருந்து வருகிறது.

கடந்த 2000-ஆவது ஆண்டுக்கு முன்பாக காரைக்கால் மாவட்டம் போலகம் பகுதியில் அரசு சார்பில் 600 ஏக்கர் வேளாண் மற்றும் தரிசு நிலங்களைக் கையகப்படுத்தி, புதுவை அரசின் 'பிப்டிக்' நிறுவனத்தின் மூலம் தொழிற்சாலைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், தொழிற்சாலைகள் அமைக்க எவரும் முன்வரவில்லை. 'வாட்' வரி விதிப்பு காரணமாக, புதுவையை வெளிமாநிலத் தொழிலதிபர்கள் தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போனது.

அதன்பிறகு, சிறப்பு பொருளாதார மண்டலமாக இதை மேம்படுத்த மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டது. இதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து, மத்திய அரசும் அனுமதியளிக்கத் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

'பிப்டிக்' வசம் உள்ள இந்த 600 ஏக்கர் நிலப்பரப்பில் சாலை வசதி, குடிநீர் தேக்கத் தொட்டி, மின் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் ஆளும் அரசுகள், புதுவையைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் என அனைவரும் காரைக்காலில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமையும் எனக் கூறி வந்தாலும், அதற்கான அறிகுறியே தெரியவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து புதுவை அரசு அதிகாரி ஒருவர் கூறியது: பொருளாதார மண்டலம் அமைக்க அரசு ஏற்பாடு செய்கிறது. ஆனால், அண்மையில் மத்திய வருவாய்த் துறைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பு தொழிலதிபர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிதாக அமையும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இனி வருமான வரிச் சலுகை கிடையாது என்பதே அது. இதனால், நாட்டில் புதிதாக தொடங்க ஒப்புதல் தரப்பட்ட 469 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கப்போவதில்லை எனத் தெரிகிறது என்றார் அவர்.

இதுகுறித்து காரைக்கால் தொழிலதிபர் ஒருவர் கூறியது: நாட்டின் ஏற்றுமதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பங்களிப்பு 25 சதமாகும். காரைக்காலில் அமைவது சிறிய அளவிலான பொருளாதார மண்டலம்தான். அரசின் சலுகை, விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், காரைக்காலில் ரூ.500 கோடி, 1000 கோடி என முதலீடு செய்து யாரும் தொழிற்சாலைகள் தொடங்க முன்வர மாட்டார்கள். புதுவை மாநில அரசு, இதற்கென சிறப்புச் சலுகைகள் அளித்தால் தொழிலதிபர்கள் வருவது சாத்தியம் என்றார் அவர்.

காரைக்காலில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதால் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏராளமானோருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

காரைக்காலில் கிளஸ்டர் அமைப்பு மூலம் ரூ.50 லட்சத்தில் உருவாக்கப்படும் தொழில்சாலைகளால் ஐடிஐ முடித்த 2000 பேருக்கு வேலை கிடைக்கும். தற்போது கையகப்படுத்தியுள்ள 600 ஏக்கர் நிலத்துக்கு அருகே நன்னிலம் செல்லும் பாதையில் 150 ஏக்கர் நிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தை கிளஸ்டர் அமைப்பினருக்கு கையகப்படுத்தித் தர அரசு முயற்சித்தால், கப்பல் துறைமுகம் - திருச்சி பெல் நிறுவனத்தை மையமாக வைத்து 50 தொழில்சாலைகள் தொடங்கமுடியுமென இதில் ஆர்வம் கொண்ட தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது போலகத்தில் உள்ள 600 ஏக்கர் நிலம் சமூக விரோதிகளுக்கு புகலிடமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக ஓர் இடம் பயனற்று இருப்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்டுகொள்வதில்லை. இதைப் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கையில் புதுவை அரசு ஈடுபடவேண்டும்.

காரைக்காலில் அமைந்துள்ள துறைமுகத்தால் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பது ஆட்சியாளர்களின் பேச்சாக உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் போலகத்தில், மக்கள் பாதிப்படையாதவாறு, சுற்றுச்சூழல் மாசடையாத தொழில்சாலைகள் அமையவும், காரைக்காலில் விமானத் தளம் அமைவதிலும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காரைக்கால் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT