புதுச்சேரி, மே 20: புதுச்சேரிக்கு புதுப்புது ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வர முறையான பஸ் வசதி இல்லை.
புதுச்சேரியில் இந்த ஆண்டில் மட்டும் புதுவை- மங்களூர் விரைவு ரயில், புதுவை- ஹெüரா அதிவேக விரைவு ரயில் ஆகிய 2 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இயங்கி வருகின்றன. மேலும் புதுவை- சென்னை சதாப்தி, புதுவை- புதுதில்லி, புதுவை- மும்பை போன்ற தடங்களில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 6 ரயில்கள் வந்து செல்கின்றன. 4 வாராந்திர ரயில்களும் வந்து செல்கிறது. புதுவை ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புதுவை பஸ் நிலையத்திலிருந்து முறையான பஸ் வசதியை புதுவை அரசால் செய்து தர முடியவில்லை. ரயிலில் வந்து செல்லும் கட்டணங்களை விட, பஸ் நிலையத்திலிருந்து, புதுவை ரயில் நிலையம் வருவதற்கான ஆட்டோ கட்டணம் அதிகமாக உள்ளது.
புஸ்ஸி வீதியில் பஸ்களுக்கு தடை: புதுவை பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்கள் புஸ்ஸி வீதி வழியாக செல்கின்றன. புஸ்ஸி வீதியில் மருத்துவமனைகளும், மருத்துவ ஆலோசனை மையங்களும், மருந்துக் கடைகளும் அதிகமாக உள்ளன. அதனால் அங்கு இரு, மூன்று, நான்கு சக்கர வாகனங்களின் வரத்து அதிகமாக உள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் முகமாகவும், ரயில் நிலையத்துக்கு பஸ் சேவையை உருவாக்கவும், புதுவை காவல்துறை சார்பில், புஸ்ஸி வீதி வழியாக செல்லும் பஸ்களை, ரயில் நிலையம் வழியாக அனுப்ப திட்டமிட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பஸ்களை மட்டும் ரயில் நிலையம் வழியாக மாற்றி விடப்பட்டது. ஷேர் ஆட்டோக்கள் வழக்கம் போல புஸ்ஸி வீதி வழியாக சென்றன. அதனால் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. ரயில் நிலையம் வழியாக பஸ்கள் விடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருமானக் குறைவு ஏற்பட்டது. புஸ்ஸி வீதி அருகில் இருந்த நீதிமன்றம், சட்டக் கல்லூரி ஆகியவை இடம் மாற்றப்பட்டன. குழந்தைகள் மருத்துவமனையும் வேறு இடத்துக்கு செல்ல உள்ளது. அதனால் ரயில் நிலையத்துக்கு பஸ் நிலையத்திலிருந்து பஸ்களை இயக்கக்கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ சங்கங்கள் போராட்டம் நடத்தின. மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வந் தது. அத னால் மேற்கொண்டு நடவடிக்கையில் புதுவை அரசு இரங்காமல், புஸ்ஸி வீதியில் பஸ்களை அனுமதிக்காமல், ரயில் நிலையம் வழியாக பஸ்களை அனுப்பும் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டு, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பஸ் நிலையத்திருந்து வரும் பஸ், ரயில் நிலையம் செல்லும்போது கம்பன் கலையரங்கம், ரயில் நிலையம், ஆம்பூர் சாலை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இதில் வரும் பயணிகள், அவர்கள் புஸ்ஸி வீதியில் செல்ல வேண்டிய இடத்துக்கு அருகில் இறங்கிக் கொள்ளலாம். அவர்கள் இறங்கிய இடத்திலிருந்து அவர்கள் செல்லுமிடம் 100 மீட்டர் தூரத்தில் தான் இருக்கும். பொது மக்களுக்கும் சிரமம் இருக்காது. புஸ்ஸி வீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.
அதனால் புஸ்ஸி வீதி வழியாக செல்லும் அனைத்து பஸ்களையும், ரயில் நிலையம் வழியாக அனுப்ப வேண்டும். தற்போது கோரிமேடிலிருந்து லாஸ்பேட்டை சென்று வரும் பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்துக்கு வரும்போது ரயில் நிலையம் சென்று வருகிறது. எந்த பஸ்ஸýம் பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு நேரடியாக செல்வதில்லை.
இன்று ஆலோசனைக் கூட்டம்: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு 50 பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 28 தாழ்தள பஸ்கள் புதுவை நகர் பகுதியில் இயங்க உள்ளன. இவை இயங்க தயார் நிலையில் புதுவை சாலை போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களுக்கான தடங்கள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தடங்களை நிர்ணயம் செய்ய வெள்ளிக்கிழமை (மே 21) ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவையடுத்து இந்த 28 பஸ்களுக்காவது ரயில் நிலையம் வழியாக செல்ல தடம் ஒதுக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ரயில் நிலையத்துக்கு பஸ்கள் செல்ல வேண்டிய பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுமா? என்றும் பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.