புதுச்சேரி

காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

காரைக்கால், நவ. 7: காரைக்கால் மீன்பிடித் துறைமுகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், படகுகளை துறைமுகத்தில் கட்ட முடியாமலும், மீன்களை இறக்க முடியாமலும் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்தக்

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், நவ. 7: காரைக்கால் மீன்பிடித் துறைமுகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், படகுகளை துறைமுகத்தில் கட்ட முடியாமலும், மீன்களை இறக்க முடியாமலும் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்தக் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

   புதுவை யூனியன் பிரதேசமான காரைக்கால் பிராந்தியத்தில் 10-க்கும் அதிகமான கடலோர மீனவக் கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ மக்களின் நலன் கருதி, காரைக்காலில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

  இதையடுத்து, மத்திய அரசிடமிருந்து ரூ.47.7 கோடி நிதி பெற்று, முல்லையாறும், அரசலாறும் கடற்கரை அருகே இணையும் இடத்தில் துறைமுகம் அமைக்க புதுவை அரசு திட்டமிட்டது. இதன்படி, அங்கு 25 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2008 ஆம் ஆண்டு துறைமுகக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

  4 கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட இந்தப் பணிகளில், முதல் கட்டமாக கடலுக்குள் இருந்து படகுகள் துறைமுகத்துக்கு வரும் வகையில், இரு பக்கமும் சுமார் 150 மீட்டர் நீளத்துக்கு கருங்கல்கள் கொட்டப்பட்டன. இந்தத் திட்டப் பணிக்காக மட்டும் ரூ.27 கோடி செலவிடப்பட்டது.

   அரசலாறு தூர் வாருதல், துறைமுகத் தளம் அமைத்தல், படகுகளைக் கட்ட ஜெட்டி கட்டுதல், மீன் ஏலக்கூடம் கட்டுதல் ஆகிய 2-வது கட்டப் பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இந்தப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டால், படகுகளை துறைமுகத்தில் கட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டதால், மீனவர்கள் படகுகளை கட்டத் தொடங்கினர்.

   ஆனால், இந்தத் துறைமுகத்தில் மற்ற அடிப்படை வசதிகள் செய்யப்படாததால், மீன்களை இறக்குவதிலும், ஏற்றுமதியாளர்கள் வந்து செல்வதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், மீனவர்கள் தங்கள் படகுகளை அரசலாற்றில் நிறுத்தி வருகின்றனர்.

  முக்கிய அடிப்படைப் பணிகளாக துறைமுக நிர்வாக வளாகம், உணவுக்கூடம், சாலை வசதி, வலை உலர்களம், மின்சார வசதி, குடிநீர், கழிப்பறை, கழிவுநீர் வெளியேறும் வசதி, துறைமுக சுற்றுச்சுவர் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ளன.

   இவற்றுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2010 ஆம் ஆண்டுக்குள் துறைமுகம் முழுமை பெறும் என ஏற்கெனவே சொல்லப்பட்டது. மத்திய திட்டக் குழுவினருக்கும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3,4-வது கட்டப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாகவும், 2011 ஆம் ஆண்டின் மத்தியில்கூட பணிகள் நிறைவு பெற வாய்ப்பில்லை எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

  முழுமை பெறாத இந்தத் துறைமுகத்தில் தமிழக மீனவர்கள் படகுகளைக் கட்டுகின்றனராம். இவ்வாறு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளில் பொருள்கள் காணாமல் போவதாகவும் கூறப்படுகிறது.

   மேலும், சட்ட விரோதச் செயலுக்காகப் பயன்படுத்தப்பட்ட புதுவை படகு அண்மையில் காரைக்கால் துறைமுகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் படகு நிறுத்தப்பட்டிருந்தது உள்ளூர் மீனவர்களுக்கே பல நாள்கள் தெரியவில்லை. இதுபோன்ற நிலையில், முழுமையடையாத துறைமுகத்தால் இந்தப் பகுதியில் பாதுகாப்பற்றச் சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆழ்கடலுக்குச் சென்று திரும்பும் மீனவர்கள், தங்கள் மீன்களை வெளியூருக்கு அனுப்ப முற்படும்போது, ஏற்றுமதியாளர்கள் இங்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனராம். அடிப்படை வசதிகள் குறைபாடே இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

   அதேபோல, கடற்கரைச் சாலையையும், அரசலாற்றையும் மீனவர்கள் பயன்படுத்துவது குறையும்போது, கடற்கரைக்கு செல்லும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு இருக்காது.

    துறைமுகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது, உணவகம் அமைப்பது, ஏற்றுமதிக்கான வாகனங்கள் வைத்து பராமரிப்பது போன்ற வருமானத்துக்குரிய வேலைவாய்ப்புகள் பெருகும்.

   மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் இந்த மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்க புதுவை அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT