பிப். 14-ல் காரைக்கால் "கார்னிவல்' தொடக்கம்
காரைக்காலில் பிப்ரவரி 14 முதல் பிப். 17-ம் தேதி வரை கார்னிவல் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்காலில் பிப்ரவரி 14 முதல் பிப். 17-ம் தேதி வரை கார்னிவல் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாள் முதல் 4 நாள்களுக்கு காரைக்காலில் கார்னிவல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதற்கான நிதியை மத்திய, மாநில சுற்றுலாத் துறைகள் பகிர்ந்து அளிக்கின்றன. கடந்த ஆண்டு, "தானே' புயல் காரணமாக, காரைக்காலில் கார்னிவல் நடத்தப்படவில்லை.
நிகழாண்டில், மத்திய அரசு ரூ. 7 லட்சமும், மாநில அரசு ரூ. 20 லட்சமும் கார்னிவலுக்காக ஒதுக்கியுள்ளன. கார்னிவல் நடத்துவதற்கான தேதியை முடிவு செய்யும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் அமைச்சர் மு. சந்திரகாசு தலைமை வகித்தார். பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆர்.என். திருமுருகன், மாவட்ட ஆட்சியர் ஜெ. அசோக்குமார், சுற்றுலாத் துறை உதவி இயக்குநர் எஸ். தட்சணாமூர்த்தி, விற்பனைக் குழு தலைவர் கே.ஆர். உதயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின்னர் சுற்றுலாத் துறை உதவி இயக்குநர் எஸ். தட்சணாமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது:
நிகழாண்டு பிப்.14 முதல் 17- ம் தேதி வரை காரைக்காலில் கார்னிவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் கலைஞர்களுக்கு ஒருநாள் வாய்ப்பு வழங்கப்படும். வெளிமாநில கலைஞர்களுக்கு 3 நாள்கள் வாய்ப்பளிக்கப்படும்.
மேலும், ரோடு-ஷோ, கட்டுமரப் போட்டி, உணவு கண்காட்சி, கைவினைப் பொருள் கண்காட்சி உள்ளிட்ட பிற அம்சங்களும் கார்னிவல் திருவிழாவில் இடம் பெறும். கார்னிவலுக்கான முதல்கட்ட ஏற்பாடுகள் தற்போது தொடங்கப்படுகின்றன. காரைக்கால் நகரப் பகுதியில் எந்த இடத்தில் கார்னிவல் திருவிழாவை நடத்துவது என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை என்றார் அவர்.