புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு
புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரிபுதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு
புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி மின்துறை 2018-2019-ஆம் நிதியாண்டுக்கான செலவு, வருவாய் மற்றும் மின் கட்டண விண்ணப்பத்தை இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தாக்கல் செய்தது. அதில், வீட்டு உபயோகம் மற்றும் குடிசை தொழிலுக்கு 100 யூனிட் வரை ரூ.1.10 ஆக உள்ள கட்டணத்தை ரூ.1.40 ஆக உயர்த்தவும், 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரை ரூ.1.75 ஆக உள்ள கட்டணத்தை ரூ.2.10 ஆக உயர்த்தவும், 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை உள்ள கட்டணத்தை ரூ.3.50 ஆக உள்ள கட்டணத்தை ரூ.3.90 ஆக உயர்த்தவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.4.60 ஆக உள்ள கட்டணத்தை ரூ.5.05 ஆக ஏப்ரல் முதல் உயர்த்தி வசூலிக்கவும் அனுமதி கேட்கப்பட்டது.
அதுபோல, வர்த்தக நிறுவனங்களுக்கு 100 யூனிட் வரை ரூ.4.70 ஆக உள்ள கட்டணத்தை ரூ.5.30 ஆக உயர்த்தவும், 101 யூனிட்டில் இருந்து 250 யூனிட் வரை ரூ.5.60 ஆக உள்ள கட்டணத்தை ரூ.6.20 ஆக உயர்த்தவும், 250 யூனிட்டுக்கு மேல் ரூ.6.25 ஆக உள்ள கட்டணத்தை ரூ.6.85 ஆக உயர்த்தி வசூலிக்கவும் அனுமதி கேட்கப்பட்டது.
இதுதொடர்பாக கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையத் தலைவர் எம்.கே.கோயல் தலைமை வகித்தார்.
ஆணைய உறுப்பினர் நீரஜாமாத்தூர், புதுச்சேரி மின் துறை தலைவரும், கண்காணிப்புப் பொறியாளருமான ரவி மற்றும் மின்துறை அதிகாரிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மின் துறை தலைவர் ரவி, 2018-19 நிதி ஆண்டுக்கான நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டண விண்ணப்பத்தை அளித்து மின்கட்டணம் உயர்த்துவதற்கான அனுமதி கோரினார். அதைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடைபெற்றது.
அப்போது, புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு பொதுச் செயலாளர் முருகானந்தம் பேசும்போது, மின்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேட்டை களைந்து மின் திருட்டு, மின் இழப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நகர்ப்புறம், கிராமப்புறங்களுக்கு ஒரே மின்கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது. நகர்ப்புறங்களில் புதை வழியாகவும் கிராமப் புறங்களில் கம்பி வழியாகவும் மின்சாரம் வழங்கப்படுகிறது. கம்பி வழி மின் விநியோகத்தால் கிராம மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஒரே மின் கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது. மேலும், மின் கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது என்றார்.
மாணவர், பெற்றோர் அமைப்புத் தலைவர் பாலா பேசும்போது, அரசு துறையில் ரூ.1.76 கோடி மின் கட்டணப் பாக்கி உள்ளது. அதுபோல, இங்கு மின்பாக்கி வைத்திருப்பவர்களிடம் கட்டணம் வசூலிப்பதுமில்லை; அவர்களது மின் இணைப்பு துண்டிப்பதுமில்லை. அதோடு, 90 சதவீத தொழிற்சாலைகள் புதுச்சேரியை விட்டு வெளியேறிவிட்டன. எனவே, எதற்கும் மின் கட்டணம் உயர்த்தக் கூடாது என்றார்.
கிழித்தெறியப்பட்ட நோட்டீஸ்கள்: கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சில அமைப்பினர் திடீரென அரங்குக்குள் நுழைந்து ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் முன் திரண்டு, மின்கட்டணத்தை உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டதுடன் மின்துறை அளித்த நோட்டீஸ்களையும் கிழித்து எறிந்தனர்.
அப்போது ஆணையத் தலைவர், "கருத்துகளை கேட்டறியவே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை' என்றார். ஆனால் அதனையும் மீறி கூச்சலிட்ட அவர்களை மண்டபத்தின் வெளியே பாதுகாப்பில் இருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேற்றினர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.