புதுச்சேரி

சட்டத்தை மதிக்கும் உணர்வு மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும்: டி.ஜி.பி. அறிவுறுத்தல்

DIN

சட்டத்தை சுயமாக மதிக்கும் உணர்வு மாணவப் பருவத்திலேயே ஏற்பட வேண்டும் என, புதுவை மாநில டி.ஜி.பி. சுனில்குமார் கௌதம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.
 காரைக்காலில் 140 மாணவ- மாணவியர்களைக் கொண்டு மாணவர் காவல் படை உருவாக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி கால நிறைவு நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 புதுச்சேரி மாநில டி.ஜி.பி. சுனில்குமார் கௌதம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர் படையின் அணிவகுப்பை பார்வையிட்டார். மாணவர் படையினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
  வளமான இந்தியா உருவாக, தேச நலன் மீது அக்கறைகொண்ட மாணவர்கள் அவசியம். ஒரு குடும்பத்தில் ஒருவர் சிறந்த கல்வி கற்றிருந்தால் அந்தக் குடும்பம் எப்படி முன்னேறுகிறதோ, அதுபோன்று மாணவர்கள் நாகரிகமான வாழ்க்கை, நல்லொழுக்கம், நல்ல பண்பு கொண்டு முன்னெடுத்தால் நல்ல குடிமகனாக உருவெடுக்கமுடியும்.   சட்டத்தை சுயமாக மதிக்கும் உணர்வு மாணவர்களுக்கு ஏற்படவேண்டும். இதற்கேற்பவே கடந்த 6 மாத கால பயிற்சியில், பல்வேறு துறை வல்லுநர்களைக் கொண்டு பாரம்பரியம், கலாசாரம், நெறிமுறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தாம் பெற்ற பயிற்சியை தமது வாழ்வின் அங்கமாகக்கொண்டு செயல்படவேண்டும் என்றார் அவர்.
 மாணவர்களை வாழ்த்தி புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசியது: மக்களிடையே பல்வேறு நிலையில் முன்னேற்றம் இருந்தும், சரியான புரிதல் இல்லாததால் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற  போராட்டங்கள் நடக்கிறது. நிர்வாகம் தர்ம சங்கடத்தை சந்திக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற போலீஸ் பயிற்சி பெறுவதன் மூலம் பல நிலையில் மாற்றம் ஏற்படும். விவசாயத்தில் நல்ல உற்பத்திக்கு வீரியமிக்க விதை அவசியமாவதுபோல, நல்ல குடிமகன் உருவாக நல்ல பண்புகளை சிறார் பருவத்திலேயே வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதற்கு இதுபோன்ற பயிற்சி பயன்படும் என்றார் அமைச்சர்.
 காவல்துறை ஐ.ஜி. ஜெகதீசன் கண்ணன், மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் உள்ளிட்டோர் பேசினர்.  மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன் வரவேற்றுப் பேசினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு.அசனா, சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன், கடலோரக் காவல் படை கமாண்டன்ட் பட்நாயக், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.குணசேகரன், மாரிமுத்து, வம்சீதரரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT