90 அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் கந்தசாமி
புதுவையில் 90 அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
புதுவையில் 90 அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தைகள் தின விழா கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குழந்தைகளை பராமரிப்பது, எந்த பிரச்னைகளுக்கெல்லாம் குழந்தைகளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம் என்பது குறித்து மருத்துவர் மஞ்சுளா எடுத்துரைத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது: மாறி வரும் விஞ்ஞான உலகில் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால், ஓராண்டுதான் தாயின் அரவணைப்பில் குழந்தைகள் உள்ளன. குழந்தைகளுக்கு 2 வயது ஆகும்போது தாயின் அரவணைப்பு கிடைப்பதில்லை. நமக்கு தாய் தந்தை என்ற உறவை கொடுத்தது குழந்தைகள் தான் நாம் அதனை உணர்ந்து குழந்தைகளை பேணிக் காக்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன. 3 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசியதாவது: புதுவை மாநில முன்னேற்றத்திற்கு அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டாலே மாநிலம் முன்னேறும். மாணவர்களுக்கு பல திறமைகள் உள்ளன.
இதனை அங்கன்வாடி ஆசிரியர்கள் வெளிக்கொண்டு வருகிறார்கள். வேலைக்குச் செல்லும் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் தான் விட்டுச் செல்கின்றனர். அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்த பெருமை புதுவைக்கு உண்டு. அதில் பெரும்பகுதி எனக்கு உண்டு. நான் அனுமதி பெற்றுத் தந்தேன்.
அங்கன்வாடி ஊழியர்கள் நிலுவையில் உள்ள சம்பளம் வர ஏற்பாடு செய்யப்படும்.
நிதி இல்லாததால் புதுவை மாநிலத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடுகள் மாற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஒரு மாத காலத்திற்குள் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 90 பேர் நிரந்தரம் செய்யப்படவில்லை என சட்டப்பேரவை உறுப்பினர் தெரிவித்துள்ளார். இவர்களை பணிநிரந்தரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார். மனநல மருத்துவர் மஞ்சுளா, குழந்தைகள் நல ஆணைய தலைவி தேவிப்பிரியா, நலத்துறை அமைச்சர் மிஹிர் வர்தன், துறை இயக்குநர் யஷ்வந்தய்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.