புதுச்சேரி

பொலிவுறு நகர திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் நிறுவனம் தொடக்கம்

 நமது நிருபர்

புதுவையில் ரூ.1850 கோடி மதிப்பிலான பொலிவுறு நகரத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் லிட் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.48 ஆயிரம் கோடி செலவிலான மத்திய அரசின் பொலிவுறு நகரங்கள் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் வகையில் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

முதல் கட்டமாக புதுவை சேதராப்பட்டு பகுதியில் பொலிவுறு நகரம் அமைக்க அதற்கான கோப்புகள் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அனுப்பப்பட்டன. இதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் தரவில்லை.

பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்.-திமுக கூட்டணி அரசு பதவியேற்றது. இந்நிலையில் புதுச்சேரியும் பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் இடம் பெறச் செய்யும் வகையில் பாரம்பரியமாக உள்ள பிரெஞ்சு கட்டடக் கலையை கொண்ட புதுவை நகரம் மற்றும் உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, உப்பளம் ராஜ்பவன், நெல்லித்தோப்பில் தலா ஒரு பகுதியை இணைத்து வரைபடம் தயார் செய்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

குடிநீர், கழிப்பறை, வாகன வசதி, 24 மணி நேர மின்சாரம், நவீன தொழில்நுட்பம் ரூ.1850 கோடிக்கு திட்டம் தீட்டப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.500 கோடி, பிரெஞ்சு அரசு ரூ.500 கோடி, வெளிச் சந்தையில் ரூ.350 கோடி என வழங்கப்படுகிறது. இத்திட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதற்காக , புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் லிட் என்ற நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக தலைமைச் செயலாளர் செயல்படுவார். அனைத்துத் துறை அரசுச் செயலாளர்கள், சுயேச்சையான இயக்குநர், மத்திய அரசின் பிரதிநிதி, நகராட்சி, அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பர். நிறுவனத்துக்கான தலைமைச் செயல் அலுவலர் விரைவில் நியமிக்கப்படுவார். ரூ.1850 மதிப்பிலான திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது சிறப்பு நோக்கு நிறுவனத்தின் பணியாகும்.

தனியாக ஆலோசனை நிறுவனங்களும் நியமிக்கப்பட உள்ளன. ரூ.50 கோடிக்கு மேலான திட்டம் என்றால் சர்வதேச ஒப்பந்தப்புள்ளியும் கோரப்படும். முன்னுரிமை அடிப்படையில் 5 தலைப்புகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

எரிசக்தி, கட்டமைப்பு, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், நகர்புற பிரச்னைக்கு தீர்வு என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

கடற்கரை புனரமைப்பு: இதற்காக விரிவான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்குப் பின் செயல்படுத்தப்படும். குறிப்பாக, கடற்கரை புனரமைப்பு பணி இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கடல் ஆராய்ச்சி நிறுவனம் (நியாட்) ஆலோசனையின்படி கடற்கரை பரப்பு புதுப்பொலிவு பெறும்.

சைக்கிள் பாதை, வாடகை திட்டம்: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சைக்கிள் வாடகை திட்டம் (ஷேரிங்) செயல்படுத்தப்படும். ஓரிடத்தில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துவிட்டு எங்கே செல்கிறோமோ அங்கேயே அதை விட்டுச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும். புல்வார்க் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக தனியாக செயலி வடிவமைக்கப்பட்டு அதன் மூலம் பணத்தை செலுத்தி விட்டு சைக்கிளை எடுத்துச் செல்லலாம். சைக்கிள் பாதுகாப்பு இடங்கள் தானியங்கி வசதி கொண்டவையாக இருக்கும். மேலும் 10.3 கி.மீ. தொலைவுக்கு தனியாக சைக்கிள் தடம் அமைக்கப்பட உள்ளது.

பெரிய கால்வாய் புனரமைப்பு: பிரான்ஸ் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட கிராண்ட் கேனால் எனப்படும் பெரிய கால்வாய் ரூ. 157 கோடிக்கு புனரமைக்கப்பட உள்ளது. கால்வாயை சீரமைத்து, நடைபாதை, சைக்கிள் தடம், உணவகங்கள் அமைக்கப்படும். அனைத்துத் துறைகளின் கண்காணிக்கும், கட்டுப்பாட்டு அம்சங்களுடன் இந்த மையம் ஏற்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்: முக்கிய அம்சமான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அனைத்து நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்படும். இதன் மூலம் அனைத்துத் துறைகளும் ஒருங்கே கண்காணிக்கப்படும். மின்துறை, பொதுப்பணித் துறை, உளளாட்சி என மக்களுக்கு சேவை புரியும் அனைத்தும் இதன் கீழ் வரும்.

புதிய மேரி கட்டடம்: புதுவையின் அடையாளமாகத் திகழ்ந்த 141 ஆண்டுகள் பழைமையான மேரி கட்டடம் இடிந்து விழுந்தது. அதை மீண்டும் அதே வடிவில் நவீன வசதிகளுடன் கட்டுவதும் முக்கிய பணியாகும்.

தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
 பகுதி சார்ந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டின் ஏஎஃப்டி நிறுவனம் ரூ.240 கோடியை கடனாக தருகிறது. பிரான்ஸ் நாட்டில் 18 பொலிவுறு நகரங்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள், தொழில்நுட்பங்கள் குறித்து பிரான்ஸ் நாட்டு நிபுணர்கள் பகிர்ந்து கொள்வர். சிறப்பு நோக்கு நிறுவனத்துக்கான அலுவலக இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. மேலும் பொலிவுறு நகரத் திட்டம் முடிவடைந்தாலும் இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கும். பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டப் பணிகளும் மீண்டும் வருவாய் ஈட்டும் வகையில் செய்யப்படும் எனத் தெரிவித்தன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT