புதுச்சேரி

இலவச அரிசி திட்டம்: ஆளுநரும், முதல்வரும் நாடகமாடுகின்றனர்; அதிமுக குற்றச்சாட்டு 

தினமணி

இலவச அரிசி திட்டம் தொடர்பாக புதுவை ஆளுநரும், முதல்வரும் நாடகமாடுகின்றனர் என்று அதிமுக பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.
 இது குறித்து சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 புதுவை மாநிலத்தில் முதல்வரும், ஆளுநரும் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு மாதம்தோறும் வழங்க வேண்டிய இலவச அரிசியை வழங்காமல் அற்ப காரணங்களுக்காக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
 கடந்த 2 ஆண்டில் இலவச அரிசி வழங்க ரூ.414 கோடி ஒதுக்கப்பட்டதில், ரூ.300 கோடி நிதி எங்கே போனது என்பதற்கு முதல்வரும், ஆளுநரும் விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது மக்களிடம் அரிசி வேண்டுமா? பணம் வேண்டுமா? எனக் கேட்டு நாடகம் நடத்துகின்றனர்.
 இலவச அரிசி திட்டத்துக்கு முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் ரூ.194 கோடி ஒதுக்கப்பட்டது. மறு ஆண்டு ரூ.216 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஆட்சி அமைத்து 23 மாதங்களில் 7 முறை மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.
 நிதிநிலை அறிக்கையில் திட்ட செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி நிதி எங்கே சென்றது என்று தெரியவில்லை. மக்கள் அரிசி வேண்டாம். பணம் வேண்டும் எனக் கூறினால் ஆளுநர் பணம் கொடுப்பாரா?.
 16 மாதங்கள் இலவச அரிசி வழங்காமல் ரூ.300 கோடி மாயமானதற்கு யார் பொறுப்பு ? இந்த விஷயத்தில் அரசிடம் சரியான கொள்கை முடிவு இல்லை. நிதிநிலை அறிக்கையில் அறிவித்த ஒரு திட்டத்தைக்கூட செயல்படுத்த அரசால் முடியவில்லை.
 அரிசி வழங்காத 16 மாதங்களுக்கான பணத்தை பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
 புதுவையில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மார்வாடி கொலையில் உள்ளூர் குற்றவாளிகளை கண்டுபிடித்ததில் பெருமை கொள்கின்றனர். ஏன் 4 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறித்து முதல்வர் விசாரணை நடத்த வேண்டும். அரசியல்வாதிகள் குற்றவாளிகளை மறைத்தனரா?.
 சென்னைக்கு பிரதமர் வந்தபோது தமிழக முதல்வர் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினார். ஆனால், புதுவை முதல்வரோ பிரதமரை சந்திக்காமல் மறுநாள் விழாவில் கலந்துகொண்டார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT