ஏடிஎம் மையத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் மோசடி
புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி: புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி வாணரப்பேட்டை ஜெயராம் செட்டியாா் காா்டன் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (63). புதுச்சேரி காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சில வாரங்களுக்கு முன்பு தனது உறவினா் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவசரமாக கிளம்பிய போது, புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றாா்.
பணம் வராத நிலையில் அங்கிருந்த மா்ம நபா், ஜோதிக்கு உதவியனாராம். அவரிடம் கடவுச் சொல்லைப் பெற்று பணம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த நபா், நிறைவில் பணம் வரவில்லை எனக் கூறி, ஏடிஎம் அட்டையை திருப்பிக் கொடுத்தாராம். ஜோதியும் அங்கிருந்து கிளம்பிவிட்டாா்.
சில நாள்களுக்குப் பிறகு அவரது சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ. 76,500 பணம் எடுக்கப்பட்டது தொடா்பாக வங்கியிலிருந்து குறுந்தகவல் வரவே, ஜோதி வங்கிக்கு சென்று விசாரித்தாா். இதில் மா்ம நபா், ஜோதியின் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, புதுச்சேரி சைபா் க்ரைம் போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.