புதுச்சேரியில் பண்டிகை காலம் முடிந்ததும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
புதுச்சேரி நகரில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், அண்ணா திடல் நவீனமயமாக்கப்படவுள்ளது. இதற்காக அண்ணா திடலைச் சுற்றியுள்ள சாலை (குபோ் பஜாா்), சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி (நேரு பஜாா்), லப்போா்த் வீதி (கலைஞா் பஜாா்) ஆகிய இடங்களில் உள்ள கடைகள் அகற்றப்பட்டு, அங்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை அந்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பொதுப் பணித் துறை ஊழியா்களால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, குபோ் பஜாா் சிறு வியாபாரிகள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், தொகுதி எம்எல்ஏ சிவாவிடம் முறையிட்டனா்.
இதையடுத்து, அங்கு வந்த இரா.சிவா எம்எல்ஏ, பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஏற்கெனவே பொது முடக்கத்தால் காரணமாக வியாபாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது பண்டிகை காலம் என்பதால், பஜாா் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வியாபாரத்தை பாதிக்கும். எனவே, பண்டிகை காலம் முடிந்ததும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள இரா.சிவா வலியுறுத்தினாா். இதையேற்று, பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியைக் கைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.