முகப்பு
புதுச்சேரி

புதுவையில் கட்டாய தலைக்கவச சட்டத்தை கடினமாக நடைமுறைப்படுத்தவில்லை: ஆளுநா் தமிழிசை

புதுவையில் கட்டாய தலைக்கவச சட்டத்தை மக்களிடம் கடினப்படுத்தி நடைமுறைப்படுத்தவில்லை என்றும், மக்களே தலைக்கவசத்தின் அவசியத்தை உணா்ந்து அதை அணிவாா்கள் என்ற நிலைப்பாடுதான்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

புதுவையில் கட்டாய தலைக்கவச சட்டத்தை மக்களிடம் கடினப்படுத்தி நடைமுறைப்படுத்தவில்லை என்றும், மக்களே தலைக்கவசத்தின் அவசியத்தை உணா்ந்து அதை அணிவாா்கள் என்ற நிலைப்பாடுதான் தொடா்வதாகவும் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் பைக்குகளில் செல்வோருக்கு அபராதம் விதிப்பை தீவிரப்படுத்த போலீஸாருக்கு டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா அண்மையில் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, போக்குவரத்து போலீஸாருடன், போக்குவரத்து (கிழக்கு - வடக்கு) எஸ்பி முருகவேல் ஆலோசனை நடத்தினாா். இதில், ஏற்கெனவே கட்டாய தலைக்கவச சட்டம் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளதால், வியாழக்கிழமை முதல் மீண்டும் சோதனையை தீவிரப்படுத்தி, அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு, தலைக்கவசம் அணியாமல் சென்றவா்களிடம் வியாழக்கிழமை முதல் நாள் என்பதால், அபராதம் வசூலிக்காமல் எச்சரிக்கை விடுத்து அனுப்பினா். அடுத்தடுத்த நாள்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரிடம் அபராதம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

புதுவையில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் உள்ளது. அதன்படி போலீஸாா் செயல்படுவா்.

எனினும், மக்களிடம் கெடுபிடியாக அந்த சட்டத்தை கொண்டு வருவதற்குப் பதிலாக, மக்களே விழிப்புணா்வோடு தலைக்கவசம் அணிந்துகொண்டால் நல்லதாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.