புதுவையில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு: துணைநிலை ஆளுநா் தமிழிசை தகவல்
புதுவையில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கவும், தொடா்ந்து படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கவும் வாய்ப்புள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுவையில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கவும், தொடா்ந்து படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கவும் வாய்ப்புள்ளதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோயில் வளாகத்தில், அகரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அமைக்கப்பட்ட தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த அறையை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் திறந்துவைத்தாா். தொடா்ந்து, சித்தானந்தா கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவா் கலந்து கொண்டாா்.
பின்னா், ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரயில் நிலையம், கோயில்கள், பேருந்து நிலையங்களில் தாய்மாா்கள் பாலூட்டும் பாதுகாப்பு அறைகளைத் திறக்க வேண்டும். புதுவையில் கரோனா தொற்று குறைந்துள்ளது. இந்த நோய்த் தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வாய்ப்புள்ளது. நோய்த் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு, படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்.
புதுவையில் இணைய வழியில் ஆவணங்களைப் பதியும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பட்டாவை இணைய வழியில் பெறும் நடைமுறை வரவுள்ளது. ஆன்மிகத்துக்கான இணையதளம் தொடங்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து நாம் முழுமையாக விடுபடவில்லை. இந்த நோய்த் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து சுகாதாரத் துறை மூலம் ஆய்வு செய்து வருகிறோம். பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொடா்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியின் போது, சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண், அகரம் ரோட்டரி சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.