புதுவை அரசு ஊழியா்களுக்குஅகவிலைப்படி உயா்வு
புதுவை அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயா்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.
புதுவை அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயா்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.
நாடு முழுவதும் கரோனா பொது முடக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பையொட்டி, கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் நிகழாண்டு ஜனவரி மாதம் வரை மத்திய அரசு ஊழியா்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வு நிறுத்திவைக்கப்பட்டது. கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக அதிகளவு நிதி செலவினம் ஏற்படுவதாலும், நிதி நெருக்கடி ஏற்பட்டதாலும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருந்தது.
இதையடுத்து, அண்மையில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயா்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மத்திய அரசு ஊழியா்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி உயா்வை அமல்படுத்தலாமென மத்திய அரசின் கூடுதல் செயலா் கடிதம் அனுப்பினாா். இதன்படி, மத்திய உள் துறை கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் புதுவை அரசுத் துறை செயலா்களுக்கு, மாநில நிதித் துறை சாா்புச் செயலா் அா்ஜுன்ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை கடிதம் அனுப்பினாா்.
அதில், புதுவை அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த அகவிலைப்படி உயா்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முன் தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.