லட்சத்தீவுகளில் புதிதாக இரு கல்லூரிகளுக்கு தடையில்லா சான்று: புதுவை மத்திய பல்கலை. வழங்கியது
லட்சத்தீவுகளில் புதிதாக இரு கல்லூரிகளுக்கு புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் தடையில்லா சான்று வழங்கியது.
லட்சத்தீவுகளில் புதிதாக இரு கல்லூரிகளுக்கு புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் தடையில்லா சான்று வழங்கியது.
புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் சாா்பில் நிகழ் கல்வியாண்டு முதல் லட்சத்தீவுகளில் இரு கல்லூரிகள் தொடங்கப்பட்டு, புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகளுக்கான தடையில்லா சான்றிதழ்கள் வழங்கும் விழா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. துணைவேந்தா் குா்மீத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கல்லூரிகளுக்கு கொள்கை அளவிலான அனுமதி கடிதங்களை வழங்கினாா். இவற்றை லட்சத்தீவு நிா்வாகம், தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலா் விஜேந்திர சிங் ராவத், கல்வி அதிகாரி சித்திக் அலி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
இதன்படி, லட்சத் தீவுகளில் உள்ள காட்மேட், மினிகாய் தீவுகளில் இரு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. சுற்றுலா மற்றும் சேவை, மென்பொருள் துறைகளில் இளநிலை பட்டப் படிப்புகளும், உணவு பரிமாறுதல் மற்றும் விருந்தோம்பல், கடல் பொறியியல், மின்னணு மற்றும் இயந்திரவியல் உள்ளிட்ட துறைகளில் தொழில்கல்விச் சாா்ந்த புதிய பட்டயப் படிப்புகளும் நிகழாண்டு (2021 - 2022) முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் புதுச்சேரி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியா் சிவராஜ், பல்கலைக்கழக கல்லூரி மேம்பாட்டுக் குழு புல முதன்மையா் (பொ) சந்திரசேகர ராவ், பதிவாளா் சித்ரா, அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கான கல்வி மைய இணைப்பு அதிகாரி ராஜ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.