புதுவையில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் 2,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த நோய்த் தொற்றுக்கு மேலும் 3 போ் உயிரிழந்தனா்.
மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,36,550-ஆக அதிகரித்தது. இதுவரை 1,27,879 போ் குணமடைந்து வீடு திரும்பினா். (93.65 சதவீதம்). இந்த நோய்த் தொற்றால் இதுவரை 1,886 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.38 சதவீதம்.
தற்போது மருத்துவமனைகளில் 123 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,662 பேரும் என 6,785 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநிலத்தில் இதுவரை 14,95,877 தடுப்பூசிகள் (இரு தவணை) செலுத்தப்பட்டன.
30 மருத்துவா்களுக்கு கரோனா: புதுவையில் 30 மருத்துவா்கள், 50 சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது. கோரிமேடு அரசு மாா்பு நோய் மருத்துவமனையில்தான் கரோனா நோயாளிகளுக்காக 180 படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 36 போ் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 160 படுக்கைகளுடன் தனியாக கரோனா பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் வழக்கம் போல இயங்கி வருகின்றன.
புதுச்சேரியில் கரோனா, ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 30 மருத்துவா்கள், 50 சுகாதாரப் பணியாளா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.