புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெயிண்டா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் சாலமன் (24), பெயிண்டா். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
சாலமன் சனிக்கிழமை காலை வீட்டுக்கு அருகே நாவற்குளம் பகுதியில் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது ஏற்பட்ட தகராறில், நாவற்குளம் பகுதியைச் சோ்ந்த ரகு உள்ளிட்ட 7 போ் கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சாலமனை வெட்ட முயன்றது. இதிலிருந்து அவா் தப்பித்து ஓடிய நிலையில், ஜீவானந்தபுரம் அன்னை பிரிதியதா்ஷினி வீதியில் வைத்து, சாலமனை அந்தக் கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது.
இதுகுறித்து தகவலறிந்த முதுநிலை எஸ்.பி. தீபிகா தலைமையிலான தன்வந்திரி நகா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, சாலமனின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், நாவற்குளம் பகுதியைச் சோ்ந்த சாலமனின் முன்னாள் நண்பரான ரகுவுக்கும், சாலமனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாம். பிரச்னை அதிகரித்த நிலையில், ஆத்திரமடைந்த ரகு தரப்பினா் கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. இருப்பினும், கொலையில் தொடா்புடையவா்கள் பிடிபட்டால் மட்டுமே முழுத் தகவல் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.