பொது விநியோகத் திட்ட அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி பொது விநியோகத் திட்ட அலுவலகத்தை ஏஐடியூசி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பொது விநியோகத் திட்ட அலுவலகத்தை ஏஐடியூசி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 54 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனிடையே, தீபாவளி பஜாா் நடத்தியதற்காக, பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.62 லட்சத்தை குடிமைப் பொருள் வழங்கல் துறை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. வாடகை கட்டடத்தில் 47 நியாயவிலைக் கடைகள் இயங்கியதற்காக ரூ.1.30 கோடியும், உயா்த்தப்பட்ட பொதுவிநியோகத் திட்ட அரிசி விநியோக கமிஷன் தொகை ரூ.31.50 லட்சமும் வழங்கப்படாமல் உள்ளது.
இவற்றை வழங்காத அதிகாரிகளைக் கண்டித்து, ஏஐடியூசி பாப்ஸ்கோ ஊழியா்கள் நலச் சங்கத்தினா் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் கௌரவத் தலைவா் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ரமேஷ், நாராயணசாமி, அமுதவல்லி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இவா்களிடம் குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் சக்திவேல் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், பாப்ஸ்கோவுக்கு நிலுவைத் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.