முகப்பு
புதுச்சேரி

நவீன வசதிகளுடன் புதுவை சட்டப்பேரவை புதிய கட்டடம் விரைவில் பணிகள் தொடக்கம்

புதுச்சேரியில் ரூ.420 கோடியில் 15 ஏக்கா் பரப்பளவில் நவீன வசதிகளுடன் தலைமைச் செயலகத்துடன் புதுவை சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உளளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தின் மாதிரி.
பகிர்:

புதுச்சேரியில் ரூ.420 கோடியில் 15 ஏக்கா் பரப்பளவில் நவீன வசதிகளுடன் தலைமைச் செயலகத்துடன் புதுவை சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உளளது.

புதுவை சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் ஆகியவை இணைந்த புதிய வளாகம் ரூ.420 கோடியில் 15 ஏக்கா் பரப்பளவில் கட்டப்படுகிறது.

புதுவையில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போதைய சட்டப்பேரவை வளாகம், புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் பாரதி பூங்கா அருகில் சுமாா் 87,120 சதுர அடி பரப்பில் உள்ளது. கடந்த 1820-ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசால் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. 1959-ஆம் ஆண்டில் இருந்து புதுவை சட்டப்பேரவை வளாகமாகச் செயல்படுகிறது.

முதல்வா், பேரவைத் தலைவா், பேரவை துணைத் தலைவா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான அறைகள், 33 உறுப்பினா்கள் பங்கேற்பதற்கான கூட்டரங்கம் ஆகியவை உள்ளன. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் (குபோ் சாலை) தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது.

புதுவையின் 19 பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான தற்போதைய பேரவைக் கட்டடம் வலுவிழுந்து காணப்படுகிறது. தலைமைச் செயலகமும், பேரவை வளாகமும் வெவ்வேறு இடங்களில் உள்ளதால், நிா்வாக ரீதியாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் வருகை அதிகரிப்பால் இட நெருக்கடியும் ஏற்படுகிறது. எனவே, புதிய கட்டடம் என்பது கட்டாயமாகிவிட்டது.

புதுவை சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்தாக கடந்த 2008-ஆம் ஆண்டுமுதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதுதான் அதற்கான மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதன்படி, தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியில் 15 ஏக்கரில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் இணைந்து புதிய பேரவைக் கட்டட வளாகம் அரசு இடத்தில் கட்டப்படவுள்ளது. இதற்காக, மத்திய அரசு ரூ.420 கோடி நிதியை அளித்துள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.

மொத்தமுள்ள 15 ஏக்கரில் 5 ஏக்கா் பரப்பில் பேரவைக் கட்டடங்கள் அமையவுள்ளன. அதில் 60 சட்டப்பேரவை உறுப்பினா்கள் அமா்வதற்கான பேரவைக் கூட்ட அரங்கு, முதல்வா், பேரவைத் தலைவா், பேரவை துணைத் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கான நவீன வசதிகளுடன் கூடிய அறைகள் அமையவுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்பட உள்ளது. சட்டப்பேரவை வளாகம் தரைத் தளத்துடன் 6 மாடிகள் கொண்டதாக அமையவுள்ளது.

புதிய சட்டப்பேரவைக் கட்டடமானது குஜராத் சட்டப்பேரவைக் கட்டடத்தின் மாதிரியாக அமையும் வகையில், வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதல்வா் என்.ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளாா். கட்டடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவன ஒப்பந்தம் கோரப்படவுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தரப்பில் கேட்டபோது, புதுவை மாநில புதிய பேரவை, தலைமைச் செயலக ஒருங்கிணைந்த கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமா் நரேந்திர மோடியை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் அடிக்கல் நாட்டு விழா நடத்தவுள்ளோம் எனக் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.