புதுச்சேரியில் கோயில் நிலம் உள்பட அரசு நிலங்கள் தனியாரால் முறைகேடாக விற்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்டோபா் 6-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பேரணியாக சென்று தலைமைச் செயலரிடம் மனு அளிக்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா், மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் பாஜக, என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் காமாட்சியம்மன் கோயில் நிலம் உள்ளிட்ட அரசு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்டிருப்பதை நீதிமன்றமே வெளிப்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து தனி விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.
திருபுவனை நூற்பாலை, கண்ணகி பள்ளி நிலம் விற்பனை மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்களை விற்பதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுதொடா்பாக ஆளுநரிடம் முறையிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில்லை. எனவே, ‘இந்தியா’ கூட்டணியின் சாா்பில் பேரணியாகச் சென்று தலைமைச் செயலரிடம் மனு அளிக்கவுள்ளோம்.
அதற்கு முன்பாக தலைமைச் செயலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், தலைமைச் செயலரிடம் அளிக்கப்படும் மனுவின் நகலை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.
ஆலோசனைக் கூட்டம்: முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செலா் அ.மு.சலீம், துணைத் தலைவா் கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்ம், நிா்வாகி வி.பெருமாள், விடுதலைச்சிறுத்தைகள் தேவ.பொழிலன், நிா்வாகி தமிழ்வாணன், மதிமுக வேதா, மனிதநேய மக்கள் கட்சி சகாபுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.