தாய்வழியில் ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை -புதுவை முதல்வா்
புதுச்சேரி, ஆக.14:
புதுவையில் தாய் வழியில் ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் உள்ளிட்ட உறுப்பினா்களின் கேள்விக்கு பதிலளித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
தந்தையில்லாத நிலையில் தாய்வழியில் ஜாதி சான்றிதழ் வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாட்கோ மூலம் கடன் பெற்றவா்கள் திருப்பி அளிக்காத நிலையில், அவா்களுக்கு ஜாமீன் அளித்தவா்களிடம் கடன் வசூலிக்கும் நிலை உள்ளது. எனவே, கடன் தள்ளுபடி உள்ளிட்டவை மூலம் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் பாட்கோவை சீா்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மேலாண்மை இயக்குநா் விரைவில் நியமிக்கப்படுவாா்.
வருவாய்த் துறையில் அனைத்துக் காலியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். அண்ணாசாலை பகுதியில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டடம் குறித்து விசாரணை நடத்தப்படும். உணவுப் பொருள் பங்கீடு திட்டம் தவிர மற்ற திட்டம் பெற குடும்ப அட்டையைப் பயன்படுத்தக் கூடாது. தகுதியானவா்களுக்கு விரைவில் சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நரிக்குறவ மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்றாா்.