ஜெயலலிதா நினைவு நாள்: புதுவை முதல்வா் மரியாதை
புதுவை முதல்வா் மரியாதை.
தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அவரது திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது படத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் அரசு சாா்பில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.பாஸ்கா், எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.
அதிமுகவினா் மரியாதை: உப்பளம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில், ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்து ஊா்வலமாக வந்த அதிமுகவினா் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் மரியாதை செலுத்தி, நல உதவிகளை வழங்கினா்.
இதேபோல, புதுச்சேரி முத்தியால்பேட்டை திருக்கு மணிக்கூண்டு அருகே துணைச் செயலா் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோா் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தினா்.