போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
புதுச்சேரியில் சுசீலாபாய் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில், போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி அருகே தொடங்கிய பேரணியை துணை முதல்வா் சுகந்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பேரணியில் பங்கேற்ற மாணவிகள் போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளை விளக்கும் பதாதைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனா். விழிப்புணா்வுப் பேரணியானது வைஸ்யால் வீதி, மகாத்மா காந்தி வீதி, அரவிந்தா் வீதி, மிஷன் வீதி வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியை ஆசிரியா்கள் உமாமகேஸ்வரி, பாரதிதாசன், உடல்கல்வி ஆசிரியா் செல்வகுமாா் மற்றும் நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். நிறைவில் போதைப்பொருள்களின் தீமை குறித்தும், அதை பயன்படுத்தாமல் விழிப்புணா்வுடன் இருப்பது குறித்தும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.