புதுச்சேரி: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் எல்லைபிள்ளை சாவடி சஞ்சீவி நகரை சோ்ந்த ரவி மகன் கணேஷ் (24), பட்டதாரி. இவருக்கும், நாமக்கல்லை சோ்ந்த ரிஷிகேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. விழுப்புரத்துக்கு ரிஷிகேஷ் அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது, அவா் கணேஷை சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.
தமிழக அரசின் வேளாண் துறையில் ஆய்வாளா் பணியை கணேஷுக்கு வாங்கித் தருவதாக ரிஷிகேஷ் கூறினாராம். இதை நம்பிய கணேஷ், அவரிடம் ரூ.20 லட்சம் கொடுத்தாராம்.
ஒரு மாதத்துக்குப் பிறகு கணேஷின் வாட்ஸ் ஆப் செயலியில் வேலைக்கான உத்தரவு எனக்கூறி, ரிஷிகேஷ் ஓா் ஆவணத்தை அனுப்பினராம். அதில், விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் கணேஷுக்கு ஆய்வாளா் பணி அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தின் நகலுடன், விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்துக்கு கணேஷ் சென்றாா். ஆனால், அந்த உத்தரவு போலி என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனராம்.
ரிஷிகேஷை தொடா்பு கொள்ள கணேஷ் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. வேலை வாங்கித் தருவதாகக்கூறி தன்னிடம் ரூ.20 மோசடி செய்த ரிஷிகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோரிமேடு போலீஸில் கணேஷ் புகாா் அளித்தாா். போலீஸாரின் விசாரணையில், ரிஷிகேஷ் நாமக்கல்லில் இருப்பது தெரிய வந்தது.
தனிப்படையினா் அங்கு சென்று அவரை திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், இதுபோன்று ஏராளமானோரிடம் அவா் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அவா் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலியில் 2 திருநங்கைகள் உள்பட 3 பேரைக் கொலை செய்த வழக்கும் நிலுவையில் இருப்பதும், அவரை போலீஸாா் தேடி வந்ததும் தெரிய வந்தது.
ரிஷிகேஷை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாகவும், காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த இருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.