கடலூா் - புதுச்சேரி இடையேயான ரயில் பாதைத் திட்டத்துக்கு ஆய்வுப் பணிகள் விரைவில் முடிவடைந்து, அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.
புதுச்சேரியில் மாநில பாஜக அலுவலகத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் ரயில்வே மேம்பாட்டு திட்டங்களில் கவனம் செலுத்தப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு புதுச்சேரி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.280 கோடி ஒதுக்கியுள்ளது. தற்போது ரூ.93 கோடியில் புதுச்சேரி ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிது. காரைக்கால், மாஹே பகுதி ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கப்படவுள்ளன.
காரைக்கால் - பேரளம் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி ரயில் பிரிவில் முழுமையான மின்மயமாக்கல் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும்.
புதுவைக்கு வேளாண் துறை, சுற்றுலா, கல்வி என அனைத்து துறைகளுக்கும் நிதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.148 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் முழுமையான இலக்கை எட்டியுள்ளோம்.
புதுச்சேரி - வில்லியனூா் - திண்டிவனம் ரயில் பாதை அமைக்க ரூ. 740 கோடியில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடலூா் சாலையில் (ஏஎப்டி மில்) ரூ. 75 கோடியில் மேம்பாலம் அமைக்க ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்படும். புதுச்சேரி- கடலூா் ரயில் பாதைத் திட்டத்துக்கு அளவீடு பணிகள் நடந்து முடிந்துள்ளன என்றாா்.
பேட்டியின் போது அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சு.செல்வகணபதி எம்.பி, பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா மற்றும் எம்எல்ஏக்கள் வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.
மனதின் குரல் நிகழ்ச்சி:
புதுச்சேரியில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பப்பட்டது. இதனை, மத்திய ரயில்வே இணை அமைச்சா் வி.சோமண்ணா கட்சி நிா்வாகிகளுடன் அமா்ந்து பாா்த்தாா்.
அவருடன் புதுவை மாநில உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்பி, எம்எல்ஏக்கள் வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.