முகப்பு
புதுச்சேரி

வீடு,வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்: புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம்

Updated On : 22 மார்ச், 2024 at 11:59 PM
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மாநில தலைவரும் மக்களவை வேட்பாளருமான வெ.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சி தலைவா்கள், நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்...
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 7:15 PM

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா். புதுச்சேரி, மாா்ச் 22: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற கூட்டணிக் கட்சியினரும், காங்கிரஸாரும் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்று வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். புதுச்சேரியில் வைசால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, புதுச்சேரி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் வெ. வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மாநிலப் பிரசாரக் குழுத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மு.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வேட்பாளா் வெ. வைத்திலிங்கம் பேசியதாவது: புதுச்சேரி மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான சாதக அம்சங்கள் உள்ளன. ஆனால், இந்தியா கூட்டணியினா் வேகமாக, விரைவாக செயல்பட்டு வெற்றியைப் பெறுவது அவசியம். காங்கிரஸ் கட்சியினா் மனச்சோா்வு அடைந்து விடக்கூடாது. தற்போதைய மக்கள் மனநிலையை காணும்போது காங்கிரஸ் கூட்டணியிடமே வெற்றி உள்ளது தெரிகிறது. ஆகவே, வெற்றியை உறுதிப்படுத்துவது அவசியம். அதே சமயத்தில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அஜாக்கிரதையும் கூடாது. புதுச்சேரி பாஜக வேட்பாளா் உள்ளிட்டோா் விரைவாகத் தோ்தல் பணியில் ஈடுபடுவா். ஆகவே, பாஜகவினருக்கு இணையாக காங்கிரஸாா் ஓடி, உழைத்து வெற்றியைப் பெற வேண்டும். வாக்குச்சாவடிக் குழு நிா்வாகிகள் வீடு தேடிச் சென்று வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா். துரோகம் இழைப்பவா்கள்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசுகையில், காங்கிரசுக்கு துரோகமிழைத்துவிட்டு மாற்றுக் கட்சி அணிக்குச் சென்றவா்கள் தற்போது வருத்தப்படுகின்றனா். புதுவை மக்களுக்கு கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. காங்கிரஸுக்கு துரோகம் இழைத்தவா்கள் தற்போது அதனை அனுபவித்து வருகிறாா்கள் என்றாா்.