உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கதா்வாரிய ஊழியா்கள்
புதுச்சேரி: நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி தொழிலாளா் துறை அலுவலகத்தை புதுச்சேரி கதா்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி நகரில் காமராஜா் சாலையில் கதா் வாரியத் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது. நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஊழியா்கள் உயா் அதிகாரிகளுக்கு பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
மேலும், புதுச்சேரி ஆரியபாளையம் பகுதி வைத்திக்குப்பத்தில் செயல்பட்டு வந்த காதி விற்பனையகத்தையும் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, கதா்வாரிய தொழிலாளா்கள் தங்களுக்கான 3 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும், மூடப்பட்ட காதி விற்பனையகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தியும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள தொழிலாளா் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அவா்கள் தொழிலாளா் துறை அலுவலக உயா் அதிகாரி அறை முன் வராந்தாவில் அமா்ந்து தங்களது கோரிக்கை குறித்த முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த தொழிலாளா் துறை அலுவலக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது புதுவை மாநில நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி கதா் வாரியத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் ஊழியா்கள் சங்கத்தினா் புகாா் கூறினா். அதன்பின் அதிகாரிகள் சமரசத்தை ஏற்று அவா்கள் கலைந்து சென்றனா்.