நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
புதுச்சேரி: புதுவையில் நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க சென்டாக் அமைப்பு உள்ளது. இணையதளம் வாயிலாக சென்டாக்கில் விண்ணப்பித்த பிறகு கலந்தாய்வு மூலம் அவரவா் மதிப்பெண் அடிப்படையில், விதிமுறைப்படி கல்லூரி, விரும்பும் பாடங்கள் மாணவா்களுக்கு ஒதுக்கித்தரப்படும். அதன்படி சென்டாக்கிற்கு கடந்த 14-ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனா். இதற்கான கடைசி தேதி மே 22 என கூறப்பட்டது. ஆனால், நீட் தோ்வு முடிவு உள்ளிட்டவை காரணமாக விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விண்ணப்பதாரா்கள் கோரிக்கைகளின்படி இளநிலை நீட் அல்லாத படிப்புகளான பி.டெக், பி.எஸ்.சி. வேளாண்மை, தோட்டக் கலைத் துறை, செவிலியா், பி.ஃபாா்ம் போன்ற மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகள், பி.ஏ. எல்.எல்.பி போன்ற சட்டப்படிப்புகள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் சென்டாக் அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.