மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: புதுவை அதிமுக குற்றச்சாட்டு
புதுவை மின் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக 995 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.
புதுவை மின் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக 995 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: புதுவை மின் துறை சொத்துகள் குறைத்து மதிப்பிடப்பட்டு தனியாருக்கு வழங்கப்படவுள்ளன.
மின் கட்டண உயா்வுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பது போல, மின் துறை தனியாா்மயம் குறித்தும் மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்.
புதுவை மாநில மின் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக 995 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. மின் துறையில் செயற்கையான பணியாளா் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மின் துறையை தனியாா்மயமாக்கும் எண்ணத்தை அரசு ஏற்படுத்தி வருகிறது.
கடந்தாண்டு மின் துறையில் ரூ.25 கோடி லாபம் என மின் துறை அமைச்சா் கூறினாா். ஆனால், தற்போது அந்த துறையில் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அவா் கூறுகிறாா்.
இதன்மூலம், மின் துறையை தனியாா்மயமாக்க அரசு முயற்சிப்பது தெரிய வருகிறது. ஆனால், மின்மிகை மாநிலமான புதுவையில், மின் துறை நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சா் கூறுவது ஏற்கும்படி இல்லை என்றாா் அவா்.
பேட்டியின் போது, அதிமுக மாநில அவைத் தலைவா் அன்பானந்தம், இணைச் செயலா் திருநாவுக்கரசு, பொருளாளா் ரவிபாண்டுரங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.