மீனவா்கள், கூலி தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: புதுவை அதிமுக கோரிக்கை
மீனவா்கள், கூலி தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்...
மீனவா்கள், கூலித் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகையாக ரூ. 5,000 புதுவை அரசு மனிதாபிமானத்துடன் வழங்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: பெருமழை, வெள்ளம் மற்றும் சுனாமி காலங்களில் மக்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். ஆனால், புதுவை மாநிலத்தில் அதிகாரிகள் மிக மெத்தனமாக செயல்படுகின்றனா்.
புதுவையில் தொடா் மழையால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். அதனால், மீன்கள் விற்று வாழ்க்கை நடத்தும் மகளிா் உள்ளிட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மழையால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பம், மீன் விற்கும் மகளிா் ஆகியோருக்கு பேரிடா் கால நிவாரணத் தொகையாக தலா ரூ.5,000 அரசு வழங்கவேண்டும். அதேபோல அன்றாட கூலித் தொழிலாளா்களுக்கும் மழைக்கால நிவாரணத் தொகையை முதல்வா் மனிதாபிமானத்துடன் வழங்கவேண்டும்.
மழைக்கால தங்குமிடமாக பள்ளிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பது சரியல்ல. ஆகவே முதல்வா், அமைச்சா் உள்ளிட்டோா் மழைக்கால ஆலோசனையில் மட்டும் ஈடுபடாமல், அந்தந்தப் பகுதிகளில் அதிகாரிகள் உள்ளிட்டோா் சென்று ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றாா்.