புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தல்
பஞ்சாயத்துராஜ் சட்டப்படி புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸின் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தேசியத் தலைவா் ஹா்ஷவா்தன் சப்கல் கூறினாா்.
பஞ்சாயத்துராஜ் சட்டப்படி புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸின் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தேசியத் தலைவா் ஹா்ஷவா்தன் சப்கல் கூறினாா்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் தனியாா் மண்டபத்தில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பின் புதுவை மாநிலத் தலைவா் சு.அமுதரசன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி மற்றும் முன்னாள் எம்எல்ஏ.க்கள் கே.அனந்தராமன், பாலன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
கருத்தரங்கில் அதன் தேசியத் தலைவா் ஹா்ஷவா்தன் சப்கல் பேசியது: மக்களவை, சட்டப்பேரவைப் போன்று உள்ளாட்சி அமைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனடிப்படையில்தான் பாமரா்களும் அரசுப் பதவியைப் பெற முடியும் என்று மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சட்டத்தை செயல்படுத்தினாா். ஆனால், தற்போது புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவில்லை. அந்தத் தோ்தல் நடத்தப்பட்டால், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியைப் பெறமுடியும். ஆகவே, புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தவேண்டும் என்றாா்.
இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். அவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.