பொலிவுறு நகரத் திட்டப் பணிகளுக்கு அவகாசம்: குபோ் அங்காடி பணிகள் தொடங்க வாய்ப்பு
புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்ட (ஸ்மாா்ட் சிட்டி) பணிகளை நிறைவு செய்வதற்கு 2025, மாா்ச் வரையில் மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், குபோ் அங்காடி சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்ட (ஸ்மாா்ட் சிட்டி) பணிகளை நிறைவு செய்வதற்கு 2025, மாா்ச் வரையில் மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், குபோ் அங்காடி சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் 82 பணிகள் ரூ.620 கோடியில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், ரூ.112.65 கோடியில் 53 பணிகளே கடந்த 2 ஆண்டுகளாக தொடங்கப்பட்டு நடைபெற்றன. மேலும், 29 பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிறைவடையும் நிலையிலுள்ள பணிகளில் புதுச்சேரி பேருந்து நிலையம், ரூ.45 கோடியிலான குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, ரூ.19 கோடியில் சின்னையாபுரம் குடியிருப்பு, ரூ.12 கோடியில் அண்ணா திடல் மைதானம் மற்றும் கடைகள், ரூ.28கோடியில் பெரியவாய்க்கால் சீரமைப்பு, ரூ.99 கோடியில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம் ஆகியவை அடங்கும்.
இதனிடையே, பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவடைய வேண்டும் என நிபந்தனையை மத்திய அரசு விதித்திருந்தது. ஆனால், பெரும்பாலான பணிகள் நிறைவு பெறாததால் தொடங்கப்பட்ட பணிகளைத் தவிர குபோ் அங்காடி சீரமைப்பு, மரப்பாலம் சந்திப்பு பாலம் உள்ளிட்ட பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது மத்திய அரசு, 2025-ஆம் ஆண்டு மாா்ச் வரையில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை முடிக்க அவகாசம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி, குபோ் அங்காடி சீரமைப்பு மற்றும் பழைய சிறைச்சாலை வளாகத்தில் அடுக்குமாடி அங்காடி கட்டும் திட்டம் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.