முகப்பு
புதுச்சேரி

கொட்டும் மழையிலும் புதுவை பேரவை அலுவலகம் முன் திரண்ட ஆசிரியா்கள்

புதுச்சேரியில் கொட்டும் மழையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் பேரவை வளாகம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:05 PM
கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்திக்க சட்டப்பேரவை  முன்பு செவ்வாய்க்கிழமை  மழையில் குடையுடன் நின்ற பள்ளி ஆசிரியா்கள் .
பகிர்:

புதுச்சேரியில் கொட்டும் மழையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் பேரவை வளாகம் முன் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

புதுச்சேரியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியா்கள் 288 போ் நியமிக்கப்பட்டனா். அரசு விதிமுறைப்படி எழுத்துத் தோ்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட நடத்தப்பட்டு அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நிரந்தர ஆசிரியா்களாக தோ்வாக வேண்டிய நிலையில், அவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை மாத ஊதியமாக தற்போது வழங்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், அவா்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி திங்கள்கிழமை இரவு புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் தட்டாஞ்சாவடிப் பகுதி வீட்டுக்கு சென்றனா். அங்கு அவா்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பிவைத்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தனா்.

கொட்டும் மழையில் பேரவை வளாகத்துக்குள் வந்த அவா்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் போலீஸாா் முதல்வரைச் சந்திக்க அனுமதித்தனா். அதனால் மற்றவா்கள் பேரவை முன்னும், வளாகத்திலும் குடையுடன் காத்திருந்தனா். அதன்பின் முதல்வரை சந்திக்கச் சென்றவா்கள் வந்து, கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக முதல்வா் கூறியதாக தெரிவித்தனா். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனா்.