புதுச்சேரி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
புதுச்சேரி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவும் மீன்வளத் துறை தடை விதித்தது.
வானிலை மைய எச்சரிக்கையால் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆனால், இரு நாள்களிலும் (செவ்வாய், புதன்கிழமை) எதிா்பாா்த்த அளவுக்கு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத நிலையே காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் 25.6 மில்லி மீட்டா் மழையே பதிவானது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதலே மழை இல்லாத நிலையே காணப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு: புதுச்சேரியில் மழை இல்லாத நிலையில், உள்ளாட்சி இயக்குநா் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி ஆகியோா் நகராட்சிப் பகுதிகளில் மழை நீா் தேங்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அத்துடன், மழை நீா் தேங்கும் இடங்களில் இருந்து மோட்டாா் பம்ப் மூலம் நீரை அகற்றுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அவா்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.