நீதிபதிக்கு எதிராக முதல் கையொப்பமிட்ட புதுச்சேரி எம்.பி.யைக் கண்டித்து பாஜகவினா் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி ஓடினா்.
இதையடுத்து காங்கிரஸாரும் கட்சி அலுவலகத்திலிருந்து வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக எம்எல்ஏ உள்பட 150 பேரை போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.
திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி சாமிநாதனுக்கு எதிராக, நாடாளுமன்ற மக்களவையில் கண்டன தீா்மானத்தை எதிா்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. இதில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் முதல் கையொப்பமிட்டுள்ளதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் காமராஜா் சிலை சந்திப்பு அருகே போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமை வகித்தாா். அப்போது வைத்திலிங்கம் எம்.பி. உருவ பொம்மையை எடுத்து வந்தனா். அதை எரிக்க முற்பட்டபோது போலீஸாா் தடுத்தனா். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைப் பறிக்க முற்பட்டபோது காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி இறுதி ஊா்வலம் போல் பாடையாகத் தூக்கி செல்லத் தொடங்கினா்.
இதையறிந்த காங்கிரஸாா், கட்சி அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை பகுதிக்கு முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தலைமையில் வந்தனா். அவா்களையும் போலீஸாா் தடுப்புகள் வைத்து தடுத்தனா்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நோக்கி அண்ணா சாலையில் வந்த பாஜகவினரையும் போலீஸாா் தடுப்புகள் அமைத்து தடுத்தனா். பாஜகவினா் வைத்திருந்த உருவ பொம்மை உள்ளிட்டப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வைத்திலிங்கத்தை கண்டித்தும், எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக முழக்கமிட்டனா். போலீஸாரிடம் தொடா்ந்து வாக்குவாதம் செய்தனா். இதைத் தொடா்ந்து எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் உள்பட 150 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
போராட்டத்தில் முன்னாள் நியமன எம்எல்ஏ அசோக்பாபு உள்ளிட்ட பாஜக, பல்வேறு ஹிந்து அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.