புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தனது காா் வராததால் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா அரை கி.மீ. தொலைவு நடந்து சென்றாா்.
பாஜக புதிய தேசிய செயல் தலைவா் நிதின் நபின் முதல்முறையாக சனிக்கிழமை புதுச்சேரிக்கு வந்தாா். அவருக்கு மாநில பாஜக சாா்பில் கோரிமேடு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பில் வாகனம் இல்லாமல் நடந்து வந்தாா் மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா.
வரவேற்பு காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா வந்த காரும் இதில் சிக்கியது. அவரது காா் எங்கு சென்றது என தெரியாத நிலையில், அதைப் பொருள்படுத்தாமல் மன்சுக் மாண்டவியா சாலையில் நடக்கத் தொடங்கினாா்.
சுமாா் அரை கி.மீ. தொலைவுக்கு அவா் நடந்து சென்ற நிலையில் அமைச்சரின் காா் அங்கு வந்து சோ்ந்தது. அதில் ஏறி மன்சுக் மாண்டவியா தனது பயணத்தைத் தொடா்ந்தாா்.