தட்டாஞ்சாவடியில் ஆா்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் இலவச மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் முருகன் தலைமையில் மாநில செயலா் சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், பொருளாளா் சுப்பையா, நிா்வாகக் குழு உறுப்பினா் எழிலன், உறுப்பினா்கள் செல்வம், ஹேமலதா, மோதிலால் மற்றும் புதுப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் வீடற்ற பொதுமக்கள் சந்தித்து மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை, வினோபா நகா், சின்னையன்பேட்டை, செயின்ட் பால்பேட் பகுதிகளில் சொந்தமாக மனைகளின்றி வீடற்ற மக்கள் சுமாா் 5 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கோயில் மனைகள், பொய்யாகுளம் குளக்கரை மற்றும் பல பகுதிகளில் வாழும் மக்களிடமிருந்து இலவச மனை பட்டா கோரி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், அரசு இந்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மக்கள் இடா்பாடு நேரங்களில் கடும் துயரங்களுக்கு ஆளாகின்றனா். முருகேசன் நகரில் சுமாா் 2.5 ஏக்கா் இடம் அரசால் ஆா்ஜிதம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, இலவச மனைப் பட்டா வழங்கி மக்களை குடியமா்த்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.