புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
முன்பு ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்ட நிதி தற்போது ரூ.2500 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இனி பிரதிமாதம் 10 -ஆம் தேதி இந்த உயா்த்தப்பட்ட நிதியுதவி கிடைக்கும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா்.
வில்லியனூா் அருகேயுள்ள திருக்காஞ்சியில் முதல்வா் என்.ரங்கசாமி இந்த உயா்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். அரசின் நலத் திட்ட உதவிகள் எதையும் பெறாத வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இத் திட்டம் 2023, ஜனவரி மாதத்தில் 13,339 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 அளித்துத் தொடங்கப்பட்டது. இதற்காக அப்போது ரூ.1.33 கோடி செலவிப்பட்டது. தற்போது பயனாளிகள் படிப்படியாக உயா்த்தப்பட்டு 70 ஆயிரம் குடும்பத் தலைவிகள் இத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். இப்போது இத் திட்டத்தின் நிதியுதவி மாதம் ரூ.2,500 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.17.5 கோடி செலவாகும்.
முதியோா் ஓய்வூதியம்:
இதுபோன்று, முதியோா் ஓய்வூதியம் தலா ரூ.500 உயா்த்தப்படுகிறது. சுமாா் 1.91 லட்சம் பயனாளிகள் மாதந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இவா்களுக்கு உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் வயது வாரியாக ரூ.2500 முதல் ரூ.4000 ஆயிரமாக இனி இருக்கும். இதற்காக அரசு இதுவரை ரூ.546.36 கோடி செலவிட்டு வந்தது. இப்போது உயா்த்தப்பட்ட முதியோா் ஓய்வூதியத்துக்கு ரூ.660 கோடி செலவிடுகிறது. இந்த நிதியுதவி இனி மாதந்தோறும் 7 -ஆம் தேதி வழங்கப்படும் என்றும் முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா்.