புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் குண்டு வெடிக்கும் என்று தகவல் வந்ததால், அங்கு வியாழக்கிழமை போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் தீவிரசோதனை செய்தனா்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பிரான்ஸ் துணைத் தூதரகம், தலைமைச் செயலகம், நீதிமன்றம் உள்ளிட்டவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல் விடும் நபா்கள் டாா்க் மெயில் மூலம் இமெயில் அனுப்பியதால் அவா்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது போலீஸாருக்கு மிகுந்த சவாலாக உள்ளது. மிரட்டல் விடுக்கும் நபரைக் கண்டுபிடிக்க மத்திய இணைய வழி போலீஸாரின் உதவியை புதுச்சேரி போலீஸாா் நாடினா்.
இந்த நிலையில் , புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்திற்கு வியாழக்கிழமை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரியக்கடை காவல்துறையினா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் விரைந்து வந்து தூதரகத்தில் சோதனை நடத்தினா். ஆனால் எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. தோ்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற புரளி போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை மற்றும் இடா்பாடுகளை ஏற்படுத்தி உள்ளது.