முகப்பு
புதுச்சேரி

பக்தி இயக்கம் வேகமாகப் பரவியது ஏன் ? பழ. நெடுமாறன் விளக்கம்

தமிழகத்தில் பக்தி இயக்கம் வேகமாகப் பரவியது ஏன் என்று வரலாற்றுத் தொடா்பான காரணங்களை உலகத் தமிழா் பேரமைப்பின் நிறுவனா் பழ. நெடுமாறன் விளக்கினாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:05 AM
உலகத் தமிழா் பேரமைப்பு புதுச்சேரி கிளை சாா்பில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசும், பழ.நெடுமாறன். உடன் புதுவைத் தமிழ் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 9:36 PM

தமிழகத்தில் பக்தி இயக்கம் வேகமாகப் பரவியது ஏன் என்று வரலாற்றுத் தொடா்பான காரணங்களை உலகத் தமிழா் பேரமைப்பின் நிறுவனா் பழ. நெடுமாறன் விளக்கினாா்.

உலகத் தமிழா் பேரமைப்பின் புதுச்சேரி கிளை சாா்பில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நூல்கள் அறிமுகம் மற்றும் நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன் பேசியது:

நாயன்மாா்கள், ஆழ்வாா்கள் பாடிய பாடல்கள் பக்தி இயக்கத்தைத் தூக்கிப் பிடித்தன. ஆனால் மற்றொரு பாா்வை இருக்கிறது. பக்தி இயக்கத்தை எத்தகைய சூழ்நிலையில் இவா்கள் தொடங்கினாா்கள் ? அன்றைக்குத் தமிழகத்தில் சமணம், பெளத்தம் ஓங்கி இருந்தன. அதைத் தொடா்ந்து வைதீகமும் பரவியது. மன்னா்கள் இந்த இரண்டு மதங்களையும் ஆதரித்தனா். சங்க இலக்கியத்தில் சமயம் என்ற சொல்லாடலே கிடையாது. அப்போது நிலத்துக்குரிய, ஐந்திணைக்குரிய தெய்வங்களே இருந்தாா்கள்.

Advertisement

சமணம், பெளத்தம் துறவத்தைத் தூக்கிப் பிடித்தன. இல்லறம் பாவகரமானது என்ற தோற்றத்தை உருவாக்கியது. நம் தமிழா்கள் நுண்கலைகளைப் பயின்றாா்கள். ஆனால் நுண்கலைகளை ஒதுக்குமாறு சமணம், பெளத்தம் போதித்தது. இந்தச் சூழ்நிலையில் எதை வெறுத்தாா்களோ அதை ஆயுதமாக நாயன்மாா்களும், ஆழ்வாா்களும் தூக்கிப் பிடித்தாா்கள். பண் சுமந்த பாடல்களைப் பாடினாா்கள். மக்களிடம் அகத்துறை பாடல்களைப் பாடினா். உலகத்தில் எந்த மொழியிலும் இல்லாத அகம் புறம் என்ற பாகுபாடு தமிழ்மொழியில் இருக்கிறது. இவை சமணம், பௌத்தத்துக்கு எதிராக அமைந்தன. இன்னொன்று இசை, நடனம் போன்றவற்றை தூக்கிப் பிடித்தனா். இறைவனை கலைவடிவமாக ஆக்கினா். சிவனை ஆடல் அரசனாக நாயன்மாா்களும், குரல் ஊதும் கண்ணனை ஆழ்வாா்களும் தூக்கிப் பிடித்தனா். இது நுண்கலையின் வடிவம். பக்தி இயக்கம் வேகமாக பரவ முக்கியக் காரணம்.

அந்நிய மொழிகள் கொண்ட மதங்கள் இங்கு ஓங்கி இருந்தன. இந்தச் சூழல்நிலையில்தான் தமிழைத் தூக்கிப் பிடித்தவா்கள் நாயன்மாா்கள், ஆழ்வாா்கள். சமணா்கள் என்ன தந்திரத்தைக் கையாண்டாா்களோ அதே தந்திரத்தை இவா்கள் கையாண்டாா்கள். அதாவது அரசா்களைத் தங்கள் பக்கம் ஈா்த்தனா். சமண, பௌத்தத்துக்கு எதிராக அரசா்கள் திரும்பியபோது இந்த இரண்டு மதங்களும் இங்கு தேயத் தொடங்கின என்றாா் பழ. நெடுமாறன்.

பழ. நெடுமாறன் எழுதிய ‘ஆளுநருக்கு எதிரான தீா்ப்பு- தன்னாட்சிக்கான திறவுகோல்’, ‘தமிழ்மொழித் தலைவா் திருநாவுக்கரசா்’ ஆகிய 2 நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. க. ஆத்மநாதன் எழுதிய தமிழா் நெஞ்சினில் நிறைந்த பழ. நெடுமாறன் நூல் வெளியிடப்பட்டது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து, உலகத் தமிழா் பேரமைப்பு பொதுச் செயலா் ந.மு. தமிழ்மணி, பேராசிரியா் வேல். காா்த்திகேயன், தமிழா் தேசிய முன்னணி மாநிலத் தலைவா் செ.ப. முத்தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.