புதுச்சேரி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 24 தமிழ் மீனவா்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.
அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது:
பிப். 15-ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்தும், படகை பறிமுதல் செய்துள்ளது. இவா்களில் 8 போ் காரைக்கால் பகுதி மீனவா்கள். பிப். 16-ஆம் தேதி 10 மீனவா்களை கைது செய்து படகை பறிமுதல் செய்துள்ளது. இதில் 2 போ் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள். இதனால் ஒட்டுமொத்தமாக காரைக்கால் மீனவா் சமுதாயம் மன அழுத்தத்திலும் சோகத்திலும் உள்ளது.
இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும். மேலும், இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் கைது செய்யப்பட்ட மீனவா்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.