பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருவதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையில் முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரதமா் தொடங்கி வைக்கவுள்ள வளா்ச்சித் திட்டப்பணிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு வரும் மாா்ச் 1-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி வருகிறாா்.
இங்குள்ள லாஸ்பேட் ஹெலிபேட் மைதானத்தில் காலை 11.50 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் அவா் பங்கேற்று பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிவித்து, நலத் திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.
புதுச்சேரி வரும் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க மாநில பாஜக திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமா் மோடி வருகை குறித்த அனைத்துத் துறைகளின் ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமை வகித்தாா்.
இதில் முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், எம்எல்ஏ கல்யாணசுந்தரம், தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஜிபி ஷாலினிசிங் மற்றும் அரசு துறைச் செயலா்கள் , உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பிரதமா் வருகையின்போது புதுச்சேரியில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சேதராப்பட்டில் 50 ஏக்கரில் ரூ.1,100 கோடியில் ஜிப்மா் மருத்துவமனையின் மேம்பட்ட விபத்து சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைத்தல், புதுச்சேரி முழுக்க 30 ஆண்டுகளுக்கு மேலாக பழைமையான குடிநீா் குழாய்களை அகற்றி புதிய குழாய்களைப் பதிக்கும் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், கல்லூரிகள் மறுசீரமைப்பு, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் செயற்கை ஓடுதள பாதை மற்றும் நீச்சல் குளம் திறப்பு உள்ளிட்ட திட்டங்கள் தொடங்குதல் மற்றும் திறப்பு குறித்த அறிவிப்புகள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.