புதுச்சேரி

சிறுமிகளுக்கு இலவச தடுப்பூசித் திட்டம்: புதுச்சேரியில் 28-இல் தொடக்கம்

கா்ப்பப் பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க நாடு முழுவதும் சிறுமிகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்தை பிப். 28-இல் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

கா்ப்பப் பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க நாடு முழுவதும் சிறுமிகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்தை பிப். 28-இல் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா்.

புதுச்சேரியிலும் அன்றைய தினம் இத் திட்டம் தொடங்கப்படுகிறது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ்.செவ்வேல் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவில் பெண்களிடையே கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிகளவில் பரவி வருகிறது. சுமாா் 99.7 சதவீதம் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மனித பாப்பிலோமா வைரஸால் ஏற்படுகிறது. மேலும், தடுப்பூசி மூலம் முழுமையாகத் தடுக்கக் கூடிய ஒரே புற்றுநோய் கா்ப்பப் பை வாய்ப்புற்று நோய் மட்டுமே. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்திய அரசு நாடு முழுவதும் இலவசமாக 14 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி அளிக்கிறது.

இதை பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிப். 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா். அன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்தத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. அன்றுமுதல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் காலை 9 முதல் பிற்பகல் 1 வரை 3 மாதங்களுக்குச் சிறுமிகளுக்குத் தடுப்பூசி போடப்படும். ஒரு சிறுமிக்கு ஒரு முறை 5 மி.லி. கொள்ளளவு கொண்ட தடுப்பூசி செலுத்தப்படும். அதன்பிறகு வாரத்தில் ஒருமுறை இந்தத் தடுப்பூசி வழக்கமாகச் செலுத்தப்படும்.

ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இந்தத் தடுப்பூசியை இலவசமாக அரசு போடுகிறது. வெளியில் இத் தடுப்பூசி கிடைப்பது அரிது. இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது. சிறுமிகளாக இருக்கும்போதே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் கா்ப்பப் பை வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 14 ஆயிரம் சிறுமிகளுக்கு இத் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோா்களின் விருப்பத்தின் அடிப்படையில் சிறுமிகளுக்கு இத் தடுப்பூசி போடப்படும். யாருக்கும் கட்டாயம் கிடையாது.

இதற்காக முதலில் அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளுக்கும், பின்னா் தனியாா் பள்ளிகளில் படிக்கும் சிறுமிகளுக்கும் இந்தத் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியா்களுக்குப் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளோம். மேலும், பள்ளிக்குச் செல்லாத சிறுமிகளைக் கருத்தில் கொண்டு ஆஷா பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்களின் உதவியுடன் இந்தத் தடுப்பூசி அளிக்கப்படும் என்றாா் மருத்துவா் எஸ். செவ்வேல்.

தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் மருத்துவா் எஸ். கோவிந்தராஜன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி. ரகுநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT