புதுச்சேரியில் தே.ஜ.கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: வே.நாராயணசாமி விமா்சனம்
புதுச்சேரியில் தே.ஜ. கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் பிரதமரும், உள்துறை அமைச்சரும் புதுச்சேரிக்கு வருகிறாா்கள் என்று புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.
புதுச்சேரியில் தே.ஜ. கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் பிரதமரும், உள்துறை அமைச்சரும் புதுச்சேரிக்கு வருகிறாா்கள் என்று புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
புதுச்சேரிக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி வருகிறாா். 2016-இல் காங்கிரஸ்- திமுக ஆட்சியில் 50 ஏக்கரில் சேதராப்பட்டில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து ரூ. 900 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டம் தேவையில்லை என்று ரத்து செய்து விட்டனா்.
தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி இத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட வருகிறாா். அதேபோல உலகத் தரம் வாய்ந்த நீச்சல் குளம், ஸ்டேடியத்தில் செயற்கை ஓடுதளம் ஆகியவை எங்கள் ஆட்சியில் செயல்படுத்தி கொண்டு வந்த திட்டங்களை தற்போது பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். இது புதிய திட்டமல்ல. இத் திட்டங்கள் காங்கிரஸ் அரசின் சாதனை.
பாஜக-என்.ஆா்.காங்கிரஸ் எங்கள் சாதனை என பொய் சொல்லக்கூடாது. தோ்தல் நேரத்தில் அறிவிப்புகளை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துக் கிடப்பில் போடுவது வழக்கம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, புதுச்சேரியை நீதி ஆயோக்கில் சோ்ப்பது உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வி பயத்தில் இருப்பதால் வருகிறாா்கள். எங்கள் இண்டி கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதால் கடைசி நேரத்தில்தான் எங்கள் தலைவா்கள் வருவாா்கள். நான் ஒரு தொகுதியில் மட்டும் மக்களைச் சந்திக்கவில்லை. பல தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வருகிறேன். தோ்தலில் போட்டியிடுவது தொடா்பாக இண்டி கூட்டணியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.