பட்டா நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி கரிக்கலாம்பாக்கத்தில் சாலை மறியல்! சட்டசபைத் தோ்தலைப் புறக்கணிக்கவும் முடிவு!
இலவச மனைப் பட்டா வழங்கி 10 ஆண்டுகளாகியும் நிலத்தை அளவீடு செய்து தராததைக் கண்டித்து புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இலவச மனைப் பட்டா வழங்கி 10 ஆண்டுகளாகியும் நிலத்தை அளவீடு செய்து தராததைக் கண்டித்து புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தாா்.
புதுச்சேரியில் கடந்த 2015-இல் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது பல தொகுதிகளைச் சோ்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
இதேபோல, கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்த சுமாா் 120 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நிலம் அளவீடு செய்து பிரித்து வழங்கப்படவில்லை.
10 ஆண்டுகளாக பட்டாவுக்கான பத்திரம் பயனாளிகளிடம் இருந்தும், நிலம் அளவீடு செய்து வழங்கப்படாததால் அந்தப் பகுதி மக்கள் தங்கள் மனைகளில் வீடு கட்டி குடியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
மீண்டும் முதல்வராக பதவியேற்ற ரங்கசாமியை நேரில் சந்தித்து நிலம் அளவீடு செய்து வழங்கும்படி கோரிக்கை வைத்தனா். ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்திலும் மனு அளித்தனராம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில் கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்த, ஏப்ரல் 16 இயக்கத் தலைவா் நித்தியானந்தம் தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அங்கு சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
10 ஆண்டுகளாக பத்திரத்தை மட்டும் மக்கள் வைத்துள்ளனா். அவா்களுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்க முதல்வா் ரங்கசாமி உத்தரவிட வேண்டும்.
இல்லாவிட்டால் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் என மறியல் போராட்டத்தின்போது முழக்கமிட்டனா்.
இதையடுத்து போலீஸாா் அங்கு வந்து பேச்சு வாா்த்தை நடத்தினா். இந்தப் பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டம் சுமாா் 1 மணி நேரம் நடைபெற்றது.