புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!
புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கத்தில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டதைப் பற்றி...
புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கத்தில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர். காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
கூட்டணியின் சார்பில் என். ரங்கசாமி மீண்டும் முதல்வராக கடந்த மே 13 -ஆம் தேதி பதவியேற்றார். அவருடன், அமைச்சர்களாக பாஜகவை சோ்ந்த ஆ. நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸைச் சோ்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து மே 18 -ல் தற்காலிக பேரவைத் தலைவராக ஆ. அன்பழகனும், மே 20-ல் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சட்டப்பேரவையில் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்பின்னர், ஜூன் 3 -ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த பெ.ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, பாஜகவை சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகர் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம், முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்தார்.
இதனைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூன் 17) காலை பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பெ. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகர் ஆகிய மூவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.